Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / இஸ்லாமிய அழைப்பு / குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை

– இந்திய விமானத் துறை ஆய்வாளர் திருச்சி ஹ. உபைதுல்லாஹ்

வரலாற்றில் முதன்முறையாக சென்னை மற்றும் குவைத்திற்கு இடையில், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் (K-Tic) கடுமையான முயற்சியின் பலனாக இண்டிகோ விமான நிறுவனத்தால் தினசரி நேரடி விமான சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்டது.

ஆண்டிற்கு அரை கோடி பன்னாட்டு விமானப் பயணிகள்,கிட்டத்தட்ட முப்பது பன்னாட்டு விமான நிறுவனங்கள், இருபத்தியிரண்டுக்கும் மேற்பட்ட பன்னாட்டு விமான நிலையங்களுடன் நேரடி இணைப்பு என்று சென்னை பன்னாட்டு விமான நிலையமானது இந்திய அளவில் அதிக பன்னாட்டு விமான பயணிகளைக் கையாளும் மூன்றாவது பன்னாட்டு விமான நிலையமாக இருந்தாலும், குவைத்திற்கு தினசரி நேரடி விமான சேவை என்பது இல்லாமலேயே இருந்தது.

குவைத் ஏர்வேஸ், சென்னை மற்றும் குவைத்திற்கு இடையில் நேரடி விமான சேவை வழங்கினாலும், தினசரி கிடையாது. வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே. அதே போல் ஏர் இந்தியா, சென்னை மற்றும் குவைத்திற்கு இடையில் தினசரி சேவை வழங்கினாலும், நேரடி சேவை கிடையாது. வாரத்தின் மூன்று நாட்கள் ஹைதராபாத் வழியாகவும், வாரத்தின் இரண்டு நாட்கள் கோவா வழியாகவும், வாரத்தின் இரண்டு நாட்கள் அகமதாபாத் வழியாகவும் சேவை வழங்கி வந்தது.

இந்நிலையில், வரலாற்றில் முதன்முறையாக சென்னை மற்றும் குவைத்திற்கு இடையில், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் (K-Tic) கடுமையான முயற்சியின் பலனாக, இண்டிகோ விமான நிறுவனத்தால் தினசரி நேரடி விமான சேவை கடந்த 15ம் தேதி வெற்றிகரமாய் தொடங்கியது.

இதற்கான பயண அட்டவணை வருமாறு:

1. தினசரி சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நள்ளிரவு 00.50க்கு புறப்படும் இண்டிகோ 6E 1751 விமானமானது குவைத் பன்னாட்டு விமான நிலையத்தை அதிகாலை 04.10க்கு சென்றடையும்.

2. அதேபோல் திரும்பு வழித்தடத்தில், தினசரி குவைத் பன்னாட்டு விமான நிலையத்தில் அதிகாலை 05.10க்கு புறப்படும் இண்டிகோ 6E 1752 விமானமானது நன்பகல் 12.35க்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடையும்.

குவைத் வாழ் தமிழர்கள் தங்கள் தேவைக்கு வந்து போக தினசரி நேரடி விமான சேவை இல்லாத நிலையில், எமிரேட்ஸ், ஏர் லங்கா, கத்தர் ஏர்வேஸ், கல்ப் ஏர், ஓமன் ஏர், ஏர் அராபியா, இத்திகாத் என்று இணைப்பு விமான சேவைகளையே பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அதேபோல் கடந்த 10 வருடங்களாக தனக்கு தினசரி விமான சேவைக்குத் தேவையான இருக்கைகள் ஒதுக்கீட்டை பெற்றிருந்தும், ஜெட் ஏர்வேஸானது, குவைத்தைப் பொறுத்த அளவில் மிக முக்கியத் தேவையான “சென்னை – குவைத்” வழித்தடத்தைப் பற்றி கொஞ்சம்கூட யோசிக்காமல் இன்றளவும் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளை பயன்படுத்தாமலேயே உள்ளது. இந்த சூழ்நிலையில் 90% குவைத் வாழ் தமிழர்கள் தங்களது தாயகப் பயணத்திற்கு வெளிநாட்டு விமான நிறுவனங்களையே சார்ந்திருந்தனர்.

இந்தச்சூழலில், இண்டிகோ விமான நிறுவனமானது, குவைத்திற்கு தினசரி நான்கு சேவைகள் மற்றும் அதற்குத் தேவையான இருக்கைகள் ஒதுக்கீட்டை மத்திய அரசின் பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் கடந்த ஜுலை மாதம்தான் பெற்றது. உடனடியாக தனது முதல் குவைத் விமான சேவையாக, “சென்னை – குவைத்” வழித்தடத்தில் சேவையைத் தொடங்கி தமிழர்களின் தேவையை பூர்த்தி செய்யத் தொடங்கியுள்ளது.

இந்தச் சேவையை திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தனது வணிக ரீதியிலான காரணங்களுக்காகவும், “இந்தியா – குவைத்” விமானப் போக்குவரத்து ஒப்பந்தங்களின் காரணமாகவும் சென்னையிலிருந்து தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த வாய்ப்புகளில் திருச்சிராப்பள்ளியை பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளது. ஏனெனில், குவைத்தைப் பொறுத்து அங்குள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைச் சார்ந்தவர்களே.

திருச்சிராப்பள்ளி, நாமக்கல், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தினரே குவைத்தில் அதிகம். இருப்பினும் தனது தனது வணிக ரீதியிலான காரணங்களுக்காக முதலில் சென்னையிலும் பின்னர் திருச்சிராப்பள்ளியிலும் தொடங்குவதாக உறுதியளித்துள்ளது.

இந்த “சென்னை – குவைத்” இண்டிகோவின் தினசரி நேரடி விமான சேவையில்” குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் (K-Tic) பங்களிப்பு அளப்பறியது. அதாவது, கடந்த பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய இந்தியன் ஏர்லைன்ஸ் (தற்போது ஏர் இந்தியா) விமானமானது, சென்னை – திருச்சிராப்பள்ளி – கோழிக்கோடு – புஜைராஹ் – குவைத், (IC 993/994) மற்றும், சென்னை – திருச்சிராப்பள்ளி – கோழிக்கோடு – ராஸ் அல் ஹைமாஹ் – குவைத் (IC 995/996) என இரண்டு வாராந்திர சேவைகளை திருச்சிராப்பள்ளிக்கு வழங்கி வந்தது. பின்னர் இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா இணைப்பு, “இந்தியா – ராஸ் அல் ஹைமாஹ்” மற்றும் இந்தியா – குவைத்” ஒப்பந்தங்களால் கடந்த அக்டோபர் 27, 2007 முதல் சேவைகளை விலக்கிக் கொண்டது.

இதற்குப் பதிலீடாக, ஏர் இந்தியா நிறுவனம் சென்னையிலிருந்து குவைத்திற்கு தினசரி சேவையையும் (வழி ஹைதராபாத் / கோவா / அகமதாபாத்), ஏர் இந்தியா எக்ஸ்பிரஸானது கோழிக்கோட்டில் இருந்து குவைத்திற்கு நான்கு வாராந்திர சேவைகளையும் வழங்கி வருகிறது. திருச்சிராப்பள்ளி மட்டும் தொடர்ந்து பதினொரு ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இந்தச் சூழலில், “திருச்சிராப்பள்ளி – குவைத்” விமான சேவையை மீட்டெடுக்கும் பொருட்டு “குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)” பல வழிகளில் தொடர்ந்து முயன்று வருகின்றது.

“இந்தியா – குவைத்” ஒப்பந்தத்தில் குவைத் ஏர்வேஸ் சேவை வழங்கும் விமான நிலையங்கள் பட்டியலில் திருச்சிராப்பள்ளி இல்லாததால், சேவை வழங்க முடியாது என தனது இயலாமையைத் தெரிவித்துவிட்டது. ஜெட் ஏர்வேஸ் தனது இருக்கைகள் ஒதுக்கீட்டை உபயோகப்படுத்த மறுப்பதால் அதற்கும் வாய்ப்பில்லை.தொடர்ந்து குவைத்தில் உள்ள இந்தியத்தூதரகத்தின் மூலமாகவும், மத்திய அரசின் “பயணிகள் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின்” மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டும் பலவழிகளில் முயன்று வருகிறது.

“குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)” முயற்சிக்கு குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன்னாள் தூதர் திரு. சுனில் ஜெயின் தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்து ஒத்துழைத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போதைய இந்தியத்தூதர் திரு.ஜீவ சாகர் அவர்களும் ஒத்துழைத்து வருகின்றார்.

இந்நிலையில் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனம் இண்டிகோவானது குவைத்தில் தனது சேவையத் தொடங்கவுள்ளதை அறிந்த “குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)” நிர்வாகிகள் இண்டிகோ விமான நிறுவன தலைமையத்தை தொடர்பு கொண்டு தங்களது கோரிக்கையான, அதாவது “திருச்சிராப்பள்ளி – குவைத்” நேரடி விமான சேவையின் தேவையையும், அது வணிக ரீதியில் இண்டிகோவிற்கு எவ்வாறு பலனளிக்கும் என்பதையும் வலியுறுத்தியது. அதேபோல், இண்டிகோ விமான நிறுவனம் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் தனது சேவையைத் தொடங்குவதற்கு முந்தைய வணிகக் கலந்துரையாடலிலிலும் (Agents Interaction) இதே கோரிக்கையை முன்னிலைப்படுத்தியது.

இண்டிகோ விமான நிறுவனமும் அதற்கான கள ஆய்வைச் செய்தது. குவைத் வாழ் தமிழர்கள் எவ்வாறு திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தை சார்ந்துள்ளனர் என்பதையும் விளங்கிக் கொண்டது. திருச்சிராப்பள்ளியில் உள்ள பயண ஏற்பாட்டாளர்கள் (டிராவல் ஏஜண்ட்கள்) இன்னும் சற்று தீவிரமாக வலியுறுத்தியிருந்தால் ஒரு வேளை இண்டிகோ விமான நிறுவனம் தனது முதல் சேவையை சென்னைக்குப் பதிலாக திருச்சிராப்பள்ளியில் தொடங்கியிருக்கலாம். பரவாயில்லை, இன்னும் வாய்ப்புள்ளது. சற்றுப் பொறுத்திருப்போமாக!

இநநிலையில் மீண்டும் “குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் (K-TIC) கோரிக்கையை ஏற்று, “சென்னை – குவைத்” நேரடி விமான சேவையில் வழக்கம்போல் மற்ற ஊர்களில் இருந்து இணைப்பு விமான சேவையைப் பெற வரும் பயணிகளுக்கு (ஒரே பயணச்சீட்டாக இருக்கும் பட்சத்தில்) தனது சலுகைக் கட்டணம் மற்றும் பயணஉடைமை (Baggage) அளவுகளை (30 kg) அனுமதித்தது. பயணக்கட்டணத்தையும் நியாயமாக குவைத்திலுள்ள பெரும்பான்மையான கடைநிலை ஊழியர்களின் வாங்குதிறன் (Buying Power) பாதிக்காத வகையில் வைத்துள்ளது.

இதனடிப்படையில், தமிழகத்தில் இண்டிகோ விமான சேவை வழங்கும் அனைத்து விமான நிலையங்களான திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களுக்கும் குவைத்திற்கும் இருவழித்தடத்திலும் இணைப்பு விமான சேவை கிடைத்துள்ளது. திருச்சிராப்பள்ளியைப் பொறுத்து ஏற்கனவே “குவைத் – கொழும்பு – திருச்சிராப்பள்ளி” வழித்தடத்தில் சேவை வழங்கி வந்த ஏர்லங்காவின் கட்டணத்தை விட, தற்போது புதிய வழித்தடமான இண்டிகோவின் “குவைத் – சென்னை – திருச்சிராப்பள்ளி” வழித்தடத்தின் பயணக்கட்டணம் மிகவும் குறைவு.

திருச்சிராப்பள்ளியில் இருந்து இண்டிகோ விமானத்தில் குவைத் செல்லும் மற்றும் வருகைதரும் பயணிகளுக்கான குடியேற்றம் (Immigration) மற்றும் சுங்கம் (Customs) நடைமுறைகள் வருமாறு:

1. திருச்சிராப்பள்ளியில் இருந்து சென்னை வழியாக குவைத் செல்லும் பயணிகள் தங்கள் பயண உடைமைகளை (30 கிலோ) திருச்சிராப்பள்ளியிலேயே இண்டிகோ விமான நிறுவனத்திடம் கொடுத்து விட்டால் அதை நேரடியாக குவைத் சென்று பெற்றுக்கொள்ளலாம். திருச்சிராப்பள்ளியில் இருந்து சென்னை சென்றவுடன் இறங்கி குவைத் இணைப்பு விமானத்தை பிடிக்கையில், சென்னையில் தங்களது குடியேற்ற (Immigration) நடைமுறைகளை முடிக்க வேண்டும். இதற்கு போதுமான கால அவகாசம் உள்ளது. இண்டிகோ விமான நிறுவனமும் தேவையான வசதிகள் செய்துள்ளது.

2. அதேபோல் குவைத்தில் இருந்து சென்னை வழியாக திருச்சிராப்பள்ளி வரும்போது, சென்னையில் இறங்கி குடியேற்ற (Immigration) நடைமுறையை முடிக்க வேண்டும். அதேபோல் சென்னையிலேயே தங்களது பயண உடைமையை எடுத்து சுங்க (Customs) நடைமுறைகளை முடிக்க வேண்டும். பின்னர் பயண உடைமைகளை அங்குள்ள “உள்நாட்டு இணைப்பு விமான சேவை வழிகாட்டி மையத்திடம் (Transfer Desk) ஒப்படைத்து விடவேண்டும். அவர்கள் உள்நாட்டு இணைப்பு விமானத்திற்கு அதாவது திருச்சிராப்பள்ளி இணைப்பு விமானத்திற்கு அனுப்பி விடுவார்கள். பின்னர் திருச்சிராப்பள்ளி வந்தடைந்த பின்னர், பயண உடைமையை எடுத்துக்கொண்டு, திருச்சிராப்பள்ளியில் எவ்வித குடியேற்ற (Immigration) மற்றும் சுங்க (Customs) நடைமுறையும் இன்றி உள்நாட்டு பயணிபோல் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறிவிடலாம். இண்டிகோ விமான நிறுவனம் பயணிகளின் தேவைக்கும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் பொருட்டு அனைத்து விமானநிலையங்களிலும் தங்களது சேவை (Service) மையங்களை வைத்துள்ளது.

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தை தங்களது பயணத் தேவைகளுக்கு சார்ந்துள்ள குவைத்தில் உள்ள பயணிகள், வழக்கமான ஏர் லங்காவின் “குவைத் – கொழும்பு – திருச்சிராப்பள்ளி” விமான சேவைக்கு மாற்றான பதிலீடான, இண்டிகோ விமானநிறுவனத்தின் “குவைத் – சென்னை – திருச்சிராப்பள்ளி” சேவையை பயன்படுத்தி தங்ளது தேவையை நிறைவேற்றிக் கொள்ளவும், இந்த விமானசேவை வெற்றி பெறவும், இதன் மூலம் “திருச்சிராப்பள்ளி – குவைத்” நேரடி விமான சேவைக்கு அழுத்தம் கொடுக்கவும் “குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)” கணிவுடன் வேண்டுகோள் விடுக்கிறது.

வரலாற்றில் முதன்முறையான இண்டிகோவின் “சென்னை – குவைத்” தினசரி நேரடி விமான சேவை வெற்றி பெறவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவது மட்டுமன்றி, விரைவில் “திருச்சிராப்பள்ளி – குவைத்” நேரடி சேவை தொடங்கவும் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு “குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)” மீண்டும் வேண்டுகோள் வைக்கிறது!

அனைத்திற்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!

கட்டுரையாளரை தொடர்பு கொள்ள… +91 98424 98194 / ubai_h@rediffmail.com

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *